தில்லி மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா விடுவிப்பு 
இந்தியா

தில்லி மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா விடுவிப்பு | Arvind Kejriwal |

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது கண்ணீர் வடித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்...

Vivek Bharathi

தில்லி மதுபானக் கொள்கையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா மற்றும் 23 பேரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் 2021-22 ஆண்டுகளில் ஆட்சி செய்த ஆம் ஆத்மி அரசு, புதிய மதுபானக் கொள்கையைக் கொண்டு வந்தது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தக் கொள்கை, பின்னர் தனியார் லாபத்திற்கு சாதகமாக மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்தக் கொள்கை கைவிடப்பட்டது.

தில்லி மதுபானக் கொள்கை வழக்கு

இதையடுத்து தில்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக மத்திய புலனாய்வு அமைப்பும் அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தன. மது விற்பனையுடன் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவா்கள் சாா்பில், அக்கட்சியைச் சோ்ந்த விஜய் நாயா் என்பவா் சுமாா் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அந்தக் குழுவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகா் ராவின் மகள் கவிதா, மகுண்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோா் இடம்பெற்றதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் முறையே சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது

பின்னர், இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணைகள் அனுப்பியது. எனினும், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. ஐந்தாவது அழைப்பாணைக்குப் பிறகும் அவர் நேரில் ஆஜராகாததால், தில்லி நீதிமன்றத்தில் கடந்த 2024 பிப்ரவரி 3-ல் அமலாக்கத் துறை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதன்பிறகு அனுப்பப்பட்ட நான்கு அழைப்பாணைகளுக்கும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை. தொடர்ந்து 9 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த 2024 மார்ச் 21 அன்று அவரைக் கைது செய்தனர். அன்றிரவு 8 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் சோதனை நடத்தினார்கள். சோதனை நடத்திய பிறகு அவரைக் கைது செய்தனர்.

சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இதன் காரணமாக மணீஷ் சிசோடியா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நீண்ட காலம் சிறையில் இருந்தனர். பின்னர் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனாலும் தி்ல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரமே இல்லை என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக சிறப்பு நீதிபதி ஜிதேந்தர் சிங் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

எந்தவித ஆதாரங்களும் இல்லை

“மதுபானக் கொள்கை வகுத்ததில் எந்தவிதமான சதித் திட்டமோ குற்றச் செயலுக்கான உள்நோக்கமோ இருந்ததற்கான ஆதாரம் இல்லை. சிபிஐ முன்வைத்த வாதங்கள் அனைத்தும் வெறும் கற்பனையானவை. புலனாய்வு அமைப்பின் வாதங்கள் நீதிமன்றத்தின் சட்டபூர்வ ஆய்வுக்கு உட்பட்டதாக இல்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 23 பேர் மீதும் எந்தவொரு முதற்கட்ட ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை. குற்றப்பத்திரிகையில் பல குறைபாடுகள் உள்ளன. எனவே, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து, ஆதாரம் இல்லாமல் அவர்களை சிறையில் வைத்தது கண்டிக்கத்தக்கது. சிபிஐ மீது துறை ரீதியான விசாரணைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர் வடித்த கெஜ்ரிவால்

இதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கண்ணீர் வடித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“கடந்த சில ஆண்டுகளாக, தில்லி மது வரி கொள்கை வழக்கில் பாஜக எங்கள்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை இன்று நீதிமன்றம் முற்றிலும் நிராகரித்துள்ளது. உண்மை எப்போதும் வெல்லும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆம்ஆத்மி கட்சிக்கு எதிராக சதி செய்து, கட்சியின் ஐந்து முக்கிய தலைவர்களை கைது செய்தனர். ஒரு பதவியில் இருக்கும் முதலமைச்சரே கைது செய்யப்பட்டார். எல்லா சேனல்களிலும் எங்களை ஊழல்வாதிகள் என்று அழைத்து குற்றம் சாட்டினர். கேஜ்ரிவால் ஊழல்வாதி அல்ல. நான் வெறும் நேர்மையை மட்டுமே சம்பாதித்திருக்கிறேன். இன்று நீதிமன்றம் கேஜ்ரிவாலும், மனீஷ் சிசோடியாவும், ஆம்ஆத்மி கட்சியும் நேர்மையானவர்கள் என்று கூறியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை அழிக்க, அதன் ஐந்து பெரிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு கண்டிராத வகையில் முதலமைச்சரையும் வீட்டிலிருந்து இழுத்துச் சென்று ஆறு மாதங்கள் சிறையில் அடைத்தார்கள். தில்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு முற்றிலும் ஜோடிக்கப்பட்டது.” என்றார்.

Delhi special court has ordered the acquittal of Arvind Kejriwal, Manish Sisodia and 23 others accused in a case filed by the CBI in the Delhi liquor policy case.