இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனு: ஏப்ரல் 15-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது அல்ல என்று தீர்ப்பளித்தார்.

கிழக்கு நியூஸ்

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் கைது நடவடிக்கைக்கு எதிராக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபன்கர் தட்டா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். 10 நாள்களுக்கு அமலாக்கத் துறை காவலில் இருந்த கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, தனது கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்றக் காவலை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது அல்ல என்று தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில் மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, அரசியல் உள்நோக்கத்துடன் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு ஏப்ரல் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.