ANI
இந்தியா

மக்களவைத் தேர்தல்: 10 உத்தரவாதங்களை அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 10 உத்தரவாதங்களை அளித்துள்ளார்.

தில்லியில் மே 25-ல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் மூலம் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 10 உத்தரவாதங்களை அளித்துள்ளார்.

தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"மக்களவைத் தேர்தலுக்கான கெஜ்ரிவாலின் 10 உத்தரவாதங்களை இன்று அறிவிக்கவுள்ளோம். நான் கைது செய்யப்பட்டதால் இந்த அறிவிப்பானது தாமதமாகியுள்ளது.

இன்று நிறைய கட்டத் தேர்தல்கள் உள்ளன. இந்த அறிவிப்புகள் குறித்து இண்டியா கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை. இது உத்தரவாதம் என்பதால், யாருக்கும் எவ்விதப் பிரச்னையும் இருக்காது. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இந்த உத்தரவாதங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்" என்றார் கெஜ்ரிவால்.

கெஜ்ரிவாலின் 10 உத்தரவாதங்கள்:

  • ஏழைகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம்

  • அனைவருக்கும் இலவசக் கல்வி

  • நல்ல சுகாதாரம்

  • தேச நலனுக்கு முன்னுரிமை - சீன ஆக்கிரமிப்பை அகற்ற ராணுவத்துக்கு முழு சுதந்திரம்

  • அக்னிவீர் திட்டத்தில் முழு நேர பணிகள்

  • விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை

  • தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து உரிமை

  • 2 கோடி வேலை வாய்ப்புகளுக்கான ஏற்பாடுகள் ஓராண்டில் தொடங்கப்படும்

  • ஊழல் ஒழிப்பு

  • ஜிஎஸ்டி முறை எளிமைப்படுத்தப்படும்