ANI
இந்தியா

தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்

சிபிஐ தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவர இப்போதைக்கு வாய்ப்பு இல்லை

ராம் அப்பண்ணசாமி

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். ஆனால் அவர் மீது சிபிஐ பதிந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 21-ல் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் தில்லி முதல்வர் கெஜ்ரிவால். மக்களவைத் தேர்தல் பரப்புரை நடந்த சமயத்தில் மட்டும் 21 நாட்கள் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். இடைக்கால ஜாமீன் முடிந்ததும் ஜூன் 2-ல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்.

இதனை அடுத்து இந்த வழக்கில் தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20-ல் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் இந்த் ஜாமீனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கியது அமலாக்கத்துறை. அதன் பிறகு 5 நாட்கள் கழித்து மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான மற்றொரு வழக்கில் கெஜ்ரிவாலைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் எடுத்து சிபிஐ.

இந்நிலையில் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு என்று கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

`சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளியே வருவதற்கும், விசாரணை நடத்துவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தேவைப்படும்போது இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திக் கொள்ளலாம். அவர் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வராக இருக்கிறார். அவருக்கென சில உரிமைகள் இருக்கின்றன. எனவே கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட அவசியம் குறித்து விசாரிக்க மற்றொரு உச்ச நீதிமன்ற அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தாலும், சிபிஐ தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவர இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.