சௌரப் பரத்வாஜ் (கோப்புப்படம்)
சௌரப் பரத்வாஜ் (கோப்புப்படம்) ANI
இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் 2-3 நாள்களில் கைது செய்யப்படுவார்: தில்லி அமைச்சர்

கிழக்கு நியூஸ்

தில்லி முதல்வர் 2-3 நாள்களில் கைது செய்யப்படுவார் என அமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான சௌரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சௌரப் பரத்வாஜ் கூறியதாவது:

"தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த 2-3 நாள்களில் கைது செய்யப்படலாம் என எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. மத்திய அரசு எதற்காக இப்படி மும்முரம் காட்டுகிறது என்பதுதான் கேள்வியாக உள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என சொல்கிறார்கள். அவரை வெளியில் பார்க்க வேண்டும் என்றால், இண்டியா கூட்டணியில் காங்கிரஸுடன் அங்கம் வகிக்கக் கூடாது என்பதுதான் ஒரே வழி என்று பாஜகவினர் தெரிவிக்கிறார்கள்.

பாஜக மிகுந்த பதற்றமடைவது தெளிவாக தெரிகிறது. ஆம் ஆத்மியும், காங்கிரஸும் எந்த மாநிலத்தில் கூட்டணி அமைத்தாலும் பாஜக ஆட்சி அமைப்பது கடினமாகிவிடும்.

அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி அமைத்த பிறகு, அது குறித்த அறிவிப்புகள் ஒன்றாக வெளியிடப்படும். பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. எனவே, அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என்றார் சௌரப் பரத்வாஜ்.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7 முறை அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது. முதல் 6 முறை அமலாக்கத் துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அமலாக்கத் துறையின் 7-வது அழைப்பாணையில் பிப்ரவரி 26-ல் நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.