இந்தியா

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டார் அதிஷி மர்லெனா

ராம் அப்பண்ணசாமி

தில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். மாலை 5 மணி அளவில் தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவைச் சந்தித்து தன் ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.

இன்று காலை (செப்.17) நடந்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கெஜ்ரிவாலால் முன்மொழியப்பட்டு, தில்லியின் புதிய முதல்வராக ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டார் அதிஷி மர்லெனா. இதை அடுத்து துணைநிலை ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் கெஜ்ரிவால்.

இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி. 70 இடங்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் தற்போது 60 இடங்கள் ஆம் ஆத்மி வசம் உள்ளன.

`இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு அளித்ததற்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அதே நேரம் தில்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்வது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. மீண்டும் கெஜ்ரிவாலை தில்லி முதல்வராக்க நான் உறுதியேற்கிறேன். தில்லியின் ஒரே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே என்பதை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும், 2 கோடி தில்லி மக்கள் சார்பில் நான் கூற விரும்புகிறேன்’ என இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அதிஷி.

தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தால் ஜாமின் அளிக்கப்பட்டு தில்லி திஹார் சிறையில் இருந்து வெளிவந்தார் கெஜ்ரிவால். இதைத் தொடர்ந்து செப்.14-ல் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் கெஜ்ரிவால். தில்லி மக்கள் தன்னை நேர்மையானவனாக அங்கீகரிக்கும் வரை முதல்வர் பதவியை ஏற்கப்போவதில்லை எனவும் அவர் அறிவித்தார்.