தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் புதுதில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்துள்ளார்.
ஆம் ஆத்மி மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவும் ஜங்புரா தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
தில்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இண்டியா கூட்டணியில் அங்கமாக உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன. தில்லியில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.
இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பகல் 12.40 மணி நிலவரப்படி பாஜக 48 இடங்களிலும் ஆம் ஆத்மி 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
ஆம் ஆத்மி பின்னடைவைச் சந்திப்பது மட்டுமல்லாமல் கட்சியின் மூத்த தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், ஆதிஷி ஆகியோரும் பின்னடைவைச் சந்தித்து வந்தார்கள். இவர்களில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுதில்லி தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங் வெற்றி பெற்றுள்ளார். ஜங்புரா தொகுதியில் மணீஷ் சிசோடியா தோல்வியடைந்துள்ளார்.