PRINT-91
இந்தியா

தில்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து: மூவர் பலி

ராம் அப்பண்ணசாமி

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 1-வது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 3 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 5 மணி அளவில் தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தின் 1-வது முனையத்தில் மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 1-வது முனையம் முழுவதுமாக பொதுப்பயன்பாட்டுக்கு மூடப்பட்டது. மேலும் மதியம் 2 மணி வரை அங்கிருந்து கிளம்பும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்தால் இடிந்து விழுந்த மேற்கூரையின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.

விபத்து நடந்த இடத்துக்குச் சென்ற மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு, `விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயப்பட்ட நான்கு நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக எங்கள் கவனத்துக்கு வந்ததும் உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு குழு, பாதுகாப்புக் குழு மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை போன்றவற்றை அனுப்பி வைத்தோம். ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்திருந்தோருக்கு முழுக்கட்டணமும் திருப்பி அளிக்கப்படும், மேலும் அவர்களுக்குத் தேவைப்பட்டால் வேறு வழியில் பயணிக்க உதவி செய்யப்படும்’ எனத் தெரிவித்தார்.

` தில்லி விமான நிலைய மேற்கூரை விபத்து, ஜபல்பூர் விமான நிலைய மேற்கூரை விபத்து, அயோத்தி சாலைகளின் படுமோசமான நிலை, ராமர் கோவிலின் மேற்கூரை ஒழுகியது, மும்பை ஹார்பர் இணைப்புச் சாலையில் விரிசல், தில்லி பிரகதி மைதான் சுரங்கப்பாதை மூழ்கியது, குஜராத் மார்பி பாலம் இடிந்தது… என இந்த விபத்துச் சம்பவங்கள் அனைத்தும் உலகத் தரமான உள்கட்டமைப்பை மேற்கொள்கிறோம் என்று கூறும் பாஜக அரசின் கூற்றுகளை அம்பலப்படுத்துகின்றன’ எனத் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.

மேலும் `கடந்த மார்ச் 10-ல் டெல்லி விமான நிலையத்தின் 1-வது முனையத்தை பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார். இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களின் இந்த நிலைக்கு ஊழல் மிகுந்த, சுயநல அரசுதான் காரணம்’ எனவும் பதிவிட்டுள்ளார் கார்கே.

இந்த விபத்து குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்குத் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.