ANI
இந்தியா

அடாவடியான நாட்டின் கைகளில் அணுஆயுதம் பாதுகாப்பாக இருக்குமா?: ராஜ்நாத் சிங் கேள்வி

பயங்கரவாதத்திற்கு எதிரான நமது உறுதிமொழி எவ்வளவு வலுவானது என்பதை, அணுஆயுத அச்சுறுத்தலைப் பற்றி நாம் கவலைப்படவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து அறியலாம்.

ராம் அப்பண்ணசாமி

ஜம்மு-காஷ்மீரின் பாதாமி பாக் கண்டோன்மென்ட் பகுதியில் வைத்து ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாடிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் வசம் இருக்கும் அணு ஆயுதங்கள் கட்டுப்பாடில்லாத சக்தி என்று கருத்து தெரிவித்ததுடன், அதை சர்வதேச மேற்பார்வையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, `ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய பாதுகாப்புப் படைகள் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் பரஸ்பரம் மேற்கொண்ட தாக்குதல்கள் கடந்த மே 10-ல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததற்குப் பிறகு முதல்முறையாக ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்குள்ள பதாமி பாக் கண்டோன்மென்ட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் வீசப்பட்ட பாகிஸ்தான் குண்டுகளை அவர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, ராணுவ வீரர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் உரையாடியதாவது,

`நமது ராணுவத்தின் இலக்கு துல்லியமானது என்பதை உலகம் அறிந்திருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதிமொழி எவ்வளவு வலுவானது என்பதை, அவர்களின் அணுஆயுத அச்சுறுத்தலைப் பற்றி நாம் கவலைப்படவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து அறியலாம்.

எவ்வளவு பொறுப்பற்ற முறையில் இந்தியாவை பாகிஸ்தான் அச்சுறுத்தியுள்ளது என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்திருக்கிறது. இத்தகைய பொறுப்பற்ற மற்றும் அடாவடித்தனமான நாட்டின் கைகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வியை இன்று, ஸ்ரீநகரில் நிலத்திலிருந்து நான் எழுப்ப விரும்புகிறேன்.

பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்’ என்றார்.