ஆகாஷ் ஏவுகணைகள் ANI
இந்தியா

பாதுகாப்புக்கான பட்ஜெட்டுக்கு கூடுதலாக ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்க வாய்ப்பு!

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், மத்திய பாதுகாப்பு பட்ஜெட்டிற்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

ராம் அப்பண்ணசாமி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொள்முதல் செய்வதற்காக நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு கூடுதல் தொகை ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை பட்ஜெட் மூலம் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கூடுதலாக ரூ.50,000 கோடி ஒதுக்குவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான ஒப்புதலைப் பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீட்டின் மூலம், பாதுகாப்புப் படைகளின் தேவைகள், அத்தியாவசியக் கொள்முதல்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான பணிகள் போன்றவை மேற்கொள்ளப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்காக ரூ. 6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டை ஒப்பிடும்போது இது 9.53% அதிகமாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், மத்திய பாதுகாப்பு பட்ஜெட்டிற்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2014-15-ம் நிதியாண்டில், பாதுகாப்புக்கான மத்திய பட்ஜெட் ரூ. 2.29 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பாண்டில், ரூ. 6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த மத்திய பட்ஜெட்டில் இது 13.45% ஆகும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்கி அழித்தன. இதன் தொடர்ச்சியாக நடந்த மோதலில் எஸ்-400, பாரக்-8, ஆகாஷ் போன்றவற்றை இந்தியா உபயோகித்தது.