நாட்டின் முதல் மனநலத் தூதராக நடிகை தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவலைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், தி லிவ் லவ் லாஃப் என்ற அறக்கட்டளை மூலம் மனநல மேம்பாடு சார்ந்த நடவடிக்கைகளைக் கடந்த 2015-ல் இருந்து மேற்கொண்டு வருகிறார். அவரது அறக்கட்டளை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ளன. இதற்கிடையில் நேற்று (அக்.10) உலகம் முழுவதும் மனநல நாள் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தின் மூலம் நாட்டின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள தீபிகா படுகோன், தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். அதில், பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி. நட்டா மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் புன்ய சலிலா ஶ்ரீவஸ்தவா உடன் இருக்கும் படத்தைத் தீபிகா படுகோன் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
“உலக மனநல தினத்தன்று, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் நமது நாட்டில் மனநலத்தைப் பொது சுகாதாரத்தின் மையமாகக் கருதும் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தி லிவ் லவ் லாஃப் அறக்கட்டளை மூலம் நாங்கள் மேற்கொண்ட பணிகளின் மூலம், நாம் ஒன்றிணைந்தால் மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்குவது எவ்வளவு சாத்தியம் என்பதைக் கண்டேன். இந்தியாவின் மனநல கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ஜே.பி. நட்டா மற்றும் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் செயல்படக் காத்திருக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.