ANI
இந்தியா

ரூ. 2000-க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கும் முடிவு ஒத்திவைப்பு

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் சுமார் 80 சதவீதத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் ரூ. 2000-க்கும் குறைவானதாகும்

ராம் அப்பண்ணசாமி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (செப்.09) 54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதில் ரூ. 2000-க்கும் குறைவான கார்டு பரிவர்த்தனைகளுக்கு 18 % ஜிஎஸ்டி விதிக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், டெபிட், கிரெடிட் கார்டுகளை உபயோகித்து மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் சேவைகளில் ரூ. 2000-க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு 18 % ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து மேலும் ஆய்வு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் சுமார் 80 சதவீதத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் ரூ. 2000-க்கும் குறைவானதாகும். மேலும் இந்தக் கூட்டத்தில் ஆன்மிகப் பயணங்களுக்கான ஹெலிகாப்டர் சேவைகள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆயுள், மருத்துவக் காப்பீடு ஆகியவற்றின் பிரீமியம் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை குறைக்க இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு குறைக்கப்படும் என்பது குறித்த முடிவை எடுக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதியில் இந்தக் குழு அறிக்கையை அளிக்கும். அறிக்கையை முன்வைத்து நவம்பர் மாதம் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, மத்திய, மாநில அரசுப் பல்கலைக்கழங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புற்றுநோய் மருந்துக்கான ஜிஎஸ்டி சரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.