நாட்டின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான சுதாகர் ரெட்டி காலமானார். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
ஹைதராபாத் சமஸ்தானத்திற்கு உட்பட்ட மஹபூப்நகர் மாவட்டத்தின் கொண்ட்ராவ்பள்ளி கிராமத்தில் கடந்த 1942 மார்ச் 25 அன்று சுகாதர் ரெட்டி பிறந்தார்.
பள்ளி மாணவராக இருந்தபோதே இடதுசாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட அவர், மாணவர் இயக்கங்களில் தீவிரமாகப் பணியாற்றினார். குறிப்பாக, 15 வயதாக இருந்தபோதே கர்னூலில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதி கோரி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தார்.
இரண்டு முறை நல்கொண்டா மக்களவை தொகுதி உறுப்பினராக (1998-1999 மற்றும் 2004-2009) அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகச்சிறந்த சொற்பொழிவாளரான இவர், தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி, விவசாயிகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் நல்வாழ்வுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.
அரசின் ஊழலை வெளிக்கொணரும் முயற்சிகளுக்கு சுதாகர் ரெட்டி பெயர் பெற்றவர். 2012 முதல் 2019 வரை மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளராகப் பணியாற்றினார்.
தனது வாழ்க்கையில் ஏராளமான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ள சுதாகர் ரெட்டி, கொள்கை பிடிப்பு மற்றும் எளிமையான வாழ்க்கை முறைக்காக போற்றப்பட்டார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பி.ஆர்.எஸ். தலைவர் கே. சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.