ANI
இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு! | C. P. Radhakrishnan

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கானத் தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கிழக்கு நியூஸ்

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது மஹாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (74) மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூலை 21 அன்று அறிவித்தார். இவருடைய ராஜினாமாவைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் பதவி காலியாக உள்ளது.

செப்டம்பர் 9-ல் தேர்தல்

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கானத் தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 1 அன்று அறிவித்தது. செப்டம்பர் 9 அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

வேட்புமனுத் தாக்கல்

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 அன்று கடைசி நாள். வேட்பாளர்கள் ஆகஸ்ட் 25 வரை வேட்புமனுவைத் திரும்பப் பெறலாம்.

இந்நிலையில், தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று கூடியது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான அதிகாரம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு வழங்கப்பட்டது. இதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சி.பி. ராதாகிருஷ்ணனின் பெயர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஜெ.பி. நட்டா செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "அடுத்த குடியரசு துணைத் தலைவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட விரும்புகிறோம். எதிர்க்கட்சிகளிடம் முறையிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரிடமும் மரியாதைச் சம்பாதித்துள்ளார் சி.பி. ராதாகிருஷ்ணன்" என்றார் நட்டா.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் சி.பி. ராதாகிருஷ்ணனை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார். எனினும் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்புடைய ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ஆகஸ்ட் 21 அன்று வேட்புமனுத் தாக்கலின்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் தில்லியில் இருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ் பின்புலத்தைக் கொண்டவர். தற்போது மஹாராஷ்டிர மாநிலத்தின் 24-வது ஆளுநராக உள்ளார். கடந்தாண்டு ஜூலை 31 அன்று மஹாராஷ்டிரத்தின் ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 2023 முதல் ஜூலை 2024 வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தார். இடைப்பட்ட காலத்தில் கூடுதல் பொறுப்பாக தெலங்கானா ஆளுநராகவும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் இருந்தார் சி.பி. ராதாகிருஷ்ணன்.

பாஜகவில் மூத்த தலைவராக இருந்துள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவராக இருந்துள்ளார். கோவையிலிருந்து இரு முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகியுள்ளார்.

கட்சி வேறுபாடின்றி மற்றவர்களுடன் நட்பு பாராட்டக் கூடியவர் சி.பி. ராதாகிருஷ்ணன். இவர், அண்மையில் சென்னை வந்திருந்தபோது, முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

C. P. Radhakrishnan | Maharashtra Governor | Vice President | Vice President Candidate | NDA Candidate | Vice President Election | Election Commission | PM Modi | JP Nadda | BJP | Tamil Nadu BJP | CP Radhakrishnan | INDIA Bloc | Opposition | Opposition Candidate