ANI
இந்தியா

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: நீதிமன்றம் தீர்ப்பு!

சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரங்கள் வரும் ஜன.20-ல் அறிவிக்கப்படவுள்ளன.

ராம் அப்பண்ணசாமி

கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனை பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய், குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது கொல்கத்தா சியல்டா நீதிமன்றம்.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கருத்தரங்கக் கூடத்தில் வைத்து, கடந்த 2024 ஆகஸ்ட் 7-ல் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதன்பிறகு கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத் திணறி அவர் உயிரிழந்தார் எனவும், அவரது உடலில் 25 இடங்களில் காயம் இருந்தது எனவும் உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்த கொல்கத்தா காவல்துறையினர், காவல்துறையில் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க மாநில மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கு விவகாரத்தில் மேற்கு வங்க அரசு உண்மையை மறைப்பதாகவும், குற்றவாளியைக் காப்பாற்ற முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே இந்தக் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது கொல்கத்தா உயர் நீதிமன்றம்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐயால் கைது செய்யப்பட்ட தாலா காவல் நிலைய ஆய்வாளர் அபிஜித் மண்டல் மற்றும் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ஆகியோருக்குக் கடந்த டிசம்பர் மாதத்தில் ஜாமின் வழங்கியது சியல்டா நீதிமன்றம்.

இந்நிலையில், இன்று (ஜன.18) தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு இந்தக் கொலை வழக்கில் முதல் ஆளாகக் கைது செய்யப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் சியல்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பெண் மருத்துவரின் பெற்றோரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்தனர்.

தீர்ப்பை வாசித்த நீதிபதி அனிர்பன் தாஸ், `சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பிஎன்எஸ் (BNS) பிரிவுகள் 64, 66 மற்றும் 103(1)-ன் கீழ் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது, இந்தக் குற்றத்திற்காக அதிகபட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையும் கிடைக்கும்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து, சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரங்கள் வரும் ஜன.20-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, `நான் இதைச் செய்யவில்லை. இதைச் செய்தவர்களை ஏன் கைது செய்யவில்லை?’ என்று சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த வழக்கில் சியல்டா நீதிமன்றம் இன்று (ஜன.18) தீர்ப்பு வழங்குவதாகத் தகவல் வெளியானதும், `இந்த வழக்கு விசாரணை பாதியிலேயே உள்ளதாகவும், நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்’ எனவும் உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.