இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கு: ஜூன் 5 தீர்ப்பு

கிழக்கு நியூஸ்

மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையிலிருந்த தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மே மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் ஜுன் மாதம் 2 அன்று திஹார் சிறையில் சரணடைய உத்தரவிட்டிருந்தது.

ஜாமீன் கிடைத்த பிறகு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த கெஜ்ரிவால், தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் அளிக்குமாறு இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நிதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த விசாரணையில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, கெஜ்ரிவாலின் இந்த இடைக்கால ஜாமீன் மனுவைக் கடுமையாக எதிர்த்தார். உச்ச நீதிமன்றத்தால் ஜுன் 2 அன்று சிறையில் சரணடைய கெஜ்ரிவாலுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என அவர் வாதிட்டார்.

மேலும், ஜாமீன் கிடைத்த பிறகு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளாமல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் கெஜ்ரிவால் எனவும் குற்றம்சாட்டினார் துஷார் மேத்தா. மற்றொரு மத்திய அரசு வழக்கறிஞரான ராஜூ, ’ஏற்கனவே ஜாமீன் பெற்று வெளியிலிருக்கும் கெஜ்ரிவால், சிறைக்குள் இருந்தபடி ஜாமீன் மனுவை அளிப்பதுதான் சரியான நடைமுறை’ எனத் தெரிவித்தார்.

கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஹரன், ‘முதல்வரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டுதான் இந்த இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது, அவருக்கு இருந்த மன அழுத்தம் காரணமாகவே ரத்தத்தின் சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்பட்டது. தகுந்த மருத்துப்பரிசோதனைகள் மேற்கொள்ளாமல் சிறைக்குச் சென்றால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம்’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, கெஜ்ரிவாலின் இந்த இடைக்கால ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஜுன் 5 அன்று வழங்குவதாகக் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.