ANI
ANI
இந்தியா

வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 4.4 லட்சம் திருட்டு: 12 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி

கிழக்கு நியூஸ்

2012-ல் வங்கிக் கணக்கிலிருந்து திருடுபோன ரூ. 4.4 லட்சத்தைத் திருப்பி செலுத்துமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு குவஹாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012-ல் தந்தையின் பாரத ஸ்டேட் வங்கிக் கணக்கிலிருந்து திருடுபோன 4.4 லட்சம் ரூபாயை, நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு தொழிலதிபர் தன்மாய் கோஸ்வாமி என்பவர் பெற்றுள்ளார். தந்தை இறந்தபோதிலும், திருடுபோன பணத்தை தாயாரின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணம் திருடுபோனதிலிருந்து, நீதிமன்ற உத்தரவு வரை நடந்த அனைத்து விவரங்களையும் தன்மாய் கோஸ்வாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

எக்ஸ் தளப் பதிவில் தன்மாய் கோஸ்வாமி தெரிவித்துள்ளதாவது:

"2012-ல் எனது தந்தையின் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கணக்கிலிருந்து 4.4 லட்சம் ரூபாய், இணையவழி பணப் பரிமாற்றம் மூலம் வெறும் 9 நாள்களில் திருடப்பட்டது.

எனது தந்தை எஸ்பிஐ டெபிட் அட்டையை வைத்திருப்பார். ஏடிஎம் மூலம் பணம் எடுக்கக்கூடிய நபர் என்பதால், இணையவழி பணப் பரிமாற்றத்துக்கான கடவுச் சொல்லை அவர் இயற்றவே இல்லை.

ஒருநாள் எஸ்பிஐ வங்கி பாஸ்புக்கில் தரவுகளைப் பதிவேற்றம் செய்தார். அப்போது தான், தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 9 நாள்களில் 35 முறை இணையவழிப் பரிமாற்றம் நடந்திருப்பது அவருக்குத் தெரிய வந்தது. எந்தவொரு பணப் பரிமாற்றத்தின்போதும் அவருக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை செய்தி வரவில்லை.

இந்த சம்பவம் குறித்து தெரியவந்தவுடன் நான், எனது மனைவி, சகோதரி ஆகியோர் உடனடியாக துப்பு துலக்கத் தொடங்கினோம். எந்தெந்த பெயர்களில் விமான டிக்கெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் தேடினோம். மகாராஷ்டிர மாநிலம் தானேவிலிருந்து டிக்கெட் எடுத்துள்ளார்கள். இவர்களை நெருங்கியதை எண்ணி நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். காவல் துறையினர் இவர்களைப் பிடித்துவிடுவார்கள் என்றும் நாங்கள் நம்பினோம்.

எனது தந்தை எஸ்பிஐ வங்கி மேலாளரிடம் தகவல் தெரிவிக்க, அவர் காவல் துறையினரிடம் புகாரளிக்கச் சொன்னார். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு எனது தந்தை சென்றபோது, குவாஹாட்டியிலுள்ள சிஐடி (CID) அலுவலகத்துக்குச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தப்பட்டார்.

நாங்கள் சேகரித்த ஆதாரங்கள் அனைத்தையும் பார்த்த பிறகு, "மஹாராஷ்டிரம் சென்று குற்றவாளிகளைக் கைது செய்ய எங்களிடம் போதிய நிதி ஆதாரம் இல்லை. உங்களால் எங்களுக்கு நிதியுதவி செய்ய முடியுமா?" என்று குவாஹாட்டியில் சிஐடி அலுவலகத்திலிருந்த ஒருவர் கேட்டதாக எனது தந்தை குற்றம்சாட்டினார். எனது பணத்தைத் திரும்பப் பெற்று தந்தால், நிச்சயமாக ஒரு பங்கைக் கொடுப்பதாக எனது தந்தையும் வாக்குறுதியளித்தார். இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், ஒன்றும் நடக்கவில்லை.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எனது தந்தை ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டார். இதிலும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

பிரச்னையின் வீரியத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அசாம் அரசு, எஸ்பிஐ வங்கி, கணக்கு வைத்திருக்கும எஸ்பிஐ வங்கிக் கிளை, ரிசர்வ் வங்கி, பிஎஸ்என்எல் (அவர் பயன்படுத்தி வந்த நெட்வொர்க்), காவல் துறை கூடுதல் டிஜிபி, சிஐடி மற்றும் தங்களுடைய காவல் கோட்டத்துக்குள்பட்ட காவல் நிலையப் பொறுப்பாளர் ஆகியோருக்கு எதிராக குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் எனது தந்தை வழக்குத் தொடர்ந்தார். நீதி கிடைப்பதற்கு முன்பே எனது தந்தை 2015-ல் காலமானார். ஆனால், அவருடைய விடாமுயற்சியும், உத்வேகமும் நீதியைப் பெற வேண்டும் என்கிற முனைப்பை எங்களிடம் உருவாக்கியது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023-ல் எனது தாயார் வங்கிக் கணக்குக்கு ரூ. 4.4 லட்சத்தைத் திருப்பிச் செலுத்துமாறு எஸ்பிஐ வங்கியை நீதமன்றம் அறிவுறுத்தியது.

மீண்டும் இரண்டு கேள்விகள் மட்டுமே அனைவரது மனதிலும் உள்ளன.

1. தாமதமாகக் கிடைக்கப் பெறும் நீதி, மறுக்கப்பட்ட நீதி?

2. ரூ. 4.4 லட்சத்துக்கு 2013-ல் இருந்த அதே மதிப்பீடு தான் இன்றைக்கும் இருக்கிறதா? அப்படியிருக்க இது வெற்றியா?" என்றார்.

இந்தப் பதிவின் கீழ், இத்தனை ஆண்டு காலம் தாமதம் ஆனதற்கான வட்டி, வழக்கறிஞர்களுக்கான கட்டணம் என எதையும் நீதிமன்றம் வழங்கவில்லையா என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். எந்தவொரு இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று தன்மாய் கோஸ்வாமி பதிலளித்தார்.