ANI
இந்தியா

அரசியல் செய்வதை விட்டுவிட்டு மணிப்பூரில் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும்: மோடி

நான் எச்சரிக்கை விடுக்கிறேன். எரியும் நெருப்பில் எண்ணை ஊற்ற நினைப்பவர்களை மணிப்பூர் மக்கள் நிராகரிப்பார்கள்

ராம் அப்பண்ணசாமி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு மாநிலங்களவையில் பதிலுரை அளித்தார் பிரதமர் மோடி. அப்போது மணிப்பூர் சம்பவம் பற்றி குறிப்பிட்டார். மணிப்பூர் குறித்த மோடியின் உரை:

`மத்திய உள்துறை அமைச்சர் பல வாரங்கள் அங்கே (மணிப்பூரில்) தங்கினார். மணிப்பூரில் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு பட்டாலியன்கள் மணிப்பூருக்குச் சென்றுள்ளன.

நான் எச்சரிக்கை விடுக்கிறேன். எரியும் நெருப்பில் எண்ணை ஊற்ற நினைப்பவர்களை மணிப்பூர் மக்கள் நிராகரிப்பார்கள். மணிப்பூரில் பத்து வருடங்கள் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது காங்கிரஸ்’ என்றார்.

காங்கிரஸைத் தாக்கிப் பேசியிருந்தாலும், `அரசியல் செய்வதை விட்டுவிட்டு மணிப்பூரில் அமைதி திரும்ப நாம் ஒத்துழைக்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகளுக்குத் தன் உரையின் மூலம் அழைப்பு விடுத்தார் மோடி.

கடந்த வருடம் மே 3-ல் மணிப்பூரில் உள்ள அனைத்து பழங்குடியின மாணவர்கள் அமைப்பு, மெய்தேய் மக்களை மாநில பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பேரணி நடத்தினர். பேரணியில் கலவரம் மூண்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு மோதல் சம்பவங்கள் நடைபெற்று, மணிப்பூரின் சட்ட ஒழுங்கு நிலவரம் மோசமடைந்தது.

மணிப்பூரில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடந்த ஜூன் மாதம் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது மேலும் எந்த ஒரு அசம்பாவித வன்முறை சம்பவங்களும் மணிப்பூரில் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.