மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியபோது, துணை ராணுவப் படையான சி.ஐ.எஸ்.எஃப். (CISF) வீரர்கள் அவைக்குள் நுழைந்ததாக காங்கிரஸ் கட்சி இன்று (ஆக. 1) குற்றம்சாட்டியுள்ளது. மிகவும் குறிப்பாக, இது ஒரு வியக்கத்தக்க மற்றும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
மாநிலங்களவைத் துணைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், இந்த சம்பவம் `மிகவும் ஆட்சேபனைக்குரியது’ என்று குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டித்துள்ளார்.
கார்கேவின் கடிதத்தில், `தங்களின் ஜனநாயக உரிமையான போராட்டத்தை உறுப்பினர்கள் பயன்படுத்தும்போது, சி.ஐ.எஸ்.எஃப். படையினர் அவையின் மையத்திற்கு விரைந்த விதம் எங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது. இதை நேற்றும் இன்றும் பார்த்தோம்.
நமது நாடாளுமன்றம் இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா? இது மிகவும் ஆட்சேபனைக்குரியது, இதை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், `எதிர்காலத்தில் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை உறுப்பினர்கள் எழுப்பும்போது, சி.ஐ.எஸ்.எஃப். படையினர் அவையின் மையப்பகுதிக்குள் வரமாட்டார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்றும் தன் கடிதத்தில் கார்கே கூறினார்.
ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அவையை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்ததாக, சி.ஐ.எஸ்.எஃப். நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விவரித்தார். மேலும் இது ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு என்றும் அவர் கூறினார்.
`ராஜ்யசபா தலைவரின் திடீர் மற்றும் முன்பு எப்போதும் இல்லாத வகையிலான ராஜினாமாவுக்குப் பிறகு, இப்போது சி.ஐ.எஸ்.எஃப். படையினர் மாநிலங்களவையின் சபையை கட்டுப்பாட்டில் எடுப்பதைக் காண்கிறோம். இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வு குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மாநிலங்களவைத் துணைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்’ என்று எக்ஸ் பதிவில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.