ANI
இந்தியா

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மௌனம் அதிர்ச்சியளிக்கிறது: ஜெ.பி.நட்டா

நடந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று உயிர்களைக் காப்பாற்றுவதில் ஈடுபடாமல், இந்த விஷயத்தை மூடி மறைக்கச் செயல்பட்டது மாநில அரசு

ராம் அப்பண்ணசாமி

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாகக் கடிதம் எழுதியுள்ளார் மத்திய சுகாதார அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா

`மிகுந்த மன பாரத்துடன் இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். தமிழ்நாட்டின் மிக மோசமான விஷச்சாராய மரணச் சம்பவத்தின் வெளிப்பாடாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் 56 மக்கள் இறந்துள்ளது நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளது’ எனத் தன் கடித்ததில் குறிப்பிட்டுள்ளார் நட்டா

மேலும், `2021-ல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டத் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதைப் போல திமுக-இண்டியா கூட்டணியால் கடந்த காலத்தில் பல வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் (வாக்குறுதிக்கு) முரணாக (கள்ளக்குறிச்சி) சட்டவிரோத விஷச்சாராய வியாபாரத்துக்கு திமுக-இண்டியா அரசு ஆதரவளித்துள்ளது. இதனால் நீங்கள் அதிகாரத்தில் இருக்கும்போதே நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயுள்ளன’ எனத் தன் கடிதத்தின் வழியாகக் கண்டனம் தெரிவித்துள்ளார் நட்டா

`விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக பேரிடர் ஏற்பட்டபோது நடந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று உயிர்களைக் காப்பாற்றுவதில் ஈடுபடாமல், இந்த விஷயத்தை மூடி மறைக்கச் செயல்பட்டது மாநில அரசு’ எனத் திமுக அரசு மீதுத் தன் கடிதம் வாயிலாகக் குற்றம் சாட்டியுள்ளார் நட்டா’

`தமிழ்நாட்டு மக்களுக்கு இரங்கல் மற்றும் அனுதாபத்தைத் தெரிவிப்பது மட்டுமின்றி, இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்குமான உதவிகளைப் பாஜக செய்து வருகிறது’ என இந்த விவகாரத்தில் பாஜக கட்சியின் நிலைபாட்டை விளக்கியுள்ளார் நட்டா

மேலும், `(திமுக) ஆளும் அரசின் ஆதரவால் கள்ளக்குறிச்சியில் நடந்த விஷச்சாராய மரணங்களைக் கண்டித்து, நாடாளுமன்ற கட்டடத்துக்கு அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பு பாஜக சார்பாக நடக்கவிருக்கும் கருப்பு பட்டை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு’ மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு இந்தக் கடிதத்தின் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார் நட்டா