காங்கிரஸ் பொருளாளர் அஜய் மாகென்
காங்கிரஸ் பொருளாளர் அஜய் மாகென் படம்: https://twitter.com/INCIndia
இந்தியா

வரிப் பயங்கரவாதத்தில் ஈடுபடும் பாஜக: காங்கிரஸ்

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சியைப் பொருளாதார ரீதியாக நிலைகுலையச் செய்வதற்காக பாஜக வரிப் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ரூ. 1,823.08 கோடியை செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பொருளாளர் அஜய் மாகென் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

பாஜக வருமான வரி சட்ட விதிகளை மிக மோசமாக மீறியதற்காக வருமான வரித் துறை அவர்களிடமிருந்து ரூ. 4,600 கோடியைக் கோர வேண்டும் என்று இவர்கள் விமர்சித்தார்கள்.

ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பொருளாதார ரீதியாக எதிர்க்கட்சியை நிலைகுலையச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது வரிப் பயங்கரவாதம். காங்கிரஸ் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே இது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் இதற்கு அடிபணிய மாட்டோம். எங்களுடைய தேர்தல் பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெறும். காங்கிரஸ் தங்களுடைய உத்தரவாதங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும். இதுபோன்ற நோட்டீஸுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். கூடுதல் ஆக்ரோஷத்துடன்தான் தேர்தலை எதிர்கொள்வோம்.

தேர்தல் ஆணையத்திடம் பாஜக தாக்கல் செய்துள்ள தரவுகளைக் கொண்டு காங்கிரஸ் பொருளாளர் அஜய் மாகென் ஆய்வு செய்துள்ளார். பிரீபெய்ட் லஞ்சம், போஸ்ட்பெய்ட் லஞ்சம், ரெய்டுக்கு பிந்தைய லஞ்சம் எனப் பல்வேறு வழிகளில் தேர்தல் நிதி பத்திரங்கள் முறைகேடு நடந்துள்ளது" என்றார்.

அஜய் மாகென் கூறுகையில், "1,800 கோடியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா..? 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மொத்த செலவே ரூ. 800 கோடிதான். எங்களுடைய விதிமீறல்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்திய அதே அளவுகோலின் அடிப்படையில் பாஜக செய்துள்ள விதிமீறல்களை கணக்கிட்டுள்ளோம். பாஜகவுக்கு ரூ. 4,600 கோடி அபராதமாக விதிக்கப்பட வேண்டும். இந்தத் தொகையை செலுத்துமாறு வருமான வரித் துறை பாஜகவிடம் கேட்க வேண்டும்" என்றார்.