இந்தியா

மகளுடன் பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் கிரண் சௌதரி

கிழக்கு நியூஸ்

ஹரியாணா காங்கிரஸ் மூத்த தலைவர் கிரண் சௌதரி, மகள் ஷ்ருதி சௌதரியுடன் இன்று பாஜகவில் இணைந்தார்.

ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி, மத்திய அமைச்சர் மனோஹர் லால் கட்டர், பாஜகவின் தேசியப் பொதுச்செயலாளர் தருண் சுக் ஆகியோரது முன்னிலையில் தில்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்தவுடன் கிரண் சௌதரி கூறியதாவது:

"2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டதால், இன்று நான் இந்த முடிவை எடுத்துள்ளோம். உலக நாடுகள் மத்தியில் இந்தியா ஒளிரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பிரதமரின் மக்கள் நலப் பணிகளால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைந்துள்ளது. கட்டருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். எங்களுக்கிடையே நிறைய கசப்பான தருணங்கள் இருந்துள்ளன. ஆனால், அவர் பணியாற்றும் விதம் எனக்கு உத்வேகத்தை அளிக்கும். வரும் நாள்களில் ஹரியாணாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை அமைப்போம்" என்றார்.

மத்திய அமைச்சரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான மனோஹர் லால் கட்டர் கூறுகையில், இரு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று கட்டர் தெரிவித்துள்ளார்.

ஹரியாணா காங்கிரஸ் மூத்த தலைவர் கிரண் சௌதரி மற்றும் ஹரியாணா காங்கிரஸ் செயல் தலைவரும், கிரண் சௌதரியின் மகளுமான ஷ்ருதி சௌதரி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்கள்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிவானி-மஹேந்திரகர் தொகுதியில் ஷ்ருதி சௌதரிக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவருக்குப் பதில் காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் எம்எல்ஏ ராவ் தன் சிங்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர் பாஜக எம்.பி. தரம்பீர் சிங்கிடம் தோல்வியடைந்தார். ஷ்ருதி சௌதரிக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாதது அதிருப்தியைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.