ANI
இந்தியா

பாஜக அரசில் அமைச்சராகப் பதவியேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.: சட்டம் சொல்வது என்ன?

மத்திய பிரதேச அரசில் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் ராம் நிவாஸ் ராவத். பதவியேற்ற பிறகு தன் எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்

ராம் அப்பண்ணசாமி

ஜூலை 8-ல் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம் நிவாஸ் ராவத்துக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் மத்திய பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல்.

மத்திய பிரதேசத்தின் குவாலியர்-சம்பல் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளவர் ராம் நிவாஸ் ராவத். விஜய்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக ஆறு முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ராம் நிவாஸ்.

2023-ல் மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய்பூர் தொகுதியில் போட்டியிட்டு ஆறாவது முறையாக எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ராம் நிவாஸ் ராவத். ஆனால் 164 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்தது பாஜக. பாஜக சார்பில் மோகன் யாதவ் மத்திய பிரதேசத்தின் முதல்வராகப் பதவியேற்றார்.

18-வது மக்களவை பொதுத்தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்தபோது கடந்த ஏப்ரல் 30-ல் பாஜகவில் இணைந்தார் ராம் நிவாஸ் ராவத். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் நரேந்திர சிங் தோமரை சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார், ராம் நிவாஸ் ராவத்தை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கும்படி மனு அளித்தார்.

ஆனால் நேற்று (ஜூலை 8) மத்திய பிரதேச அரசில் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் ராம் நிவாஸ் ராவத். பதவியேற்ற பிறகு தன் எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு அரசியல் கட்சியால் தேர்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., வேறொரு அரசியல் கட்சியில் இணைந்தால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவரது எம்.எல்.ஏ பதவி பறிபோகும். ஆனால் ராம் நிவாஸ் கட்சி மாறியது மட்டுமல்லாமல் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யாமல் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி எம்.எல்.ஏ பதவியில் இல்லாத ஒரு நபர் அமைச்சராகப் பதவியேற்ற 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்தெடுக்கப்பட வேண்டும். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள ராம் நிவாஸ் விஜய்பூர் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளார்.

ஆனால் பாஜகவில் இணைந்த பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ. பதவியை ராம் நிவாஸ் ராவத் ராஜினாமா செய்யாமல் அமைச்சராகப் பதவியேற்றது சட்டப்படி தவறு. இந்த விஷயத்தில் பேரவைத் தலைவர் நரேந்திர சிங் தோமர் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தின் உதவியை நாடலாம் என்று தெரிகிறது.