ப. சிதம்பரம் (கோப்புப்படம்)
ப. சிதம்பரம் (கோப்புப்படம்) 
இந்தியா

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 5-ல் வெளியீடு

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் ஏப்ரல் 5-ல் வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக சத்தீஸ்கரின் முன்னாள் துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ நியமிக்கப்பட்டார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், பிரியங்கா காந்தி வதேரோ ஆகியோர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 5-ல் தேர்தல் அறிக்கையை தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வெளியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாதில் ஏப்ரல் 6-ல் இரு பெரிய பேரணிகளை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஜெயப்பூரில் நடைபெறவுள்ள பேரணியில் சோனியா காந்தி பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் இதுவரை 25 உத்தரவாதங்களை அளித்துள்ளது.

முன்னதாக, அரசுப் பணிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வாக்குறுதியை வெளியிட்டார்.

நாடு முழுக்க 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.