கோப்புப்படம் 
இந்தியா

ஹரியாணாவில் பின்னடைவுக்கு உள்கட்சி விவகாரம் காரணம்?: காங்கிரஸ் மூத்த தலைவர் விளக்கம்

"வேட்பாளர்கள் அறிவிப்பும் ஒரு காரணம். அதுகுறித்து தற்போது கூறி என்ன பயன்?"

கிழக்கு நியூஸ்

ஹரியாணாவில் பின்னடைவைச் சந்தித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி செல்ஜா தெரிவித்துள்ளார்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பல சுவாரஸ்யங்களைக் கடந்து பாஜக தற்போது முன்னிலை வகித்து வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என கணிப்புகள் வெளியாகியிருந்தன.

வாக்கு எண்ணிக்கையிலும் தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. ஆட்சி அமைக்கத் தேவையான 46 இடங்களைக் கடந்து காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. காலை 9.30 மணியளவிலிருந்து போக்கு அப்படியே மாறியது. காங்கிரஸ் சரிவைச் சந்திக்க பாஜக படிப்படியாக முன்னிலை பெற்றது.

மாலை 4.50 மணியளவில் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி 61 இடங்களில் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 30 இடங்களிலும் காங்கிரஸ் 29 இடங்களிலும் சுயேச்சைகள் இரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 29 இடங்களில் பாஜக 19 இடங்களிலும் காங்கிரஸ் 7 இடங்களிலும் இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களிலும் சுயேச்சை 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல் பின்னடைவு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி செல்ஜா விளக்கமளித்துள்ளார்.

என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

"இன்று காலை மிகுந்த உற்சாகத்தில் இருந்தேன். 60 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தேன். எனவே, இந்த முடிவானது எங்களுக்கு மிகப் பெரிய பின்னடைவு. எங்களுடையத் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்வோம். நிறைய காரணங்கள் இருக்கலாம். வரும் தேர்தல்களில் இவற்றை எப்படி கடக்க வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு இரு பெரிய விஷயங்கள் இருந்தன. பாஜக மீதான எதிர்மறை பார்வை. நம்பிக்கையான தேர்வாக காங்கிரஸ் உள்ளது. இந்த இரண்டு விஷயங்களிலும் எங்களுடையக் கணிப்பு தவறாகியுள்ளது. அனைத்துக் காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. வேட்பாளர்கள் அறிவிப்பும் ஒரு காரணம். அதுகுறித்து தற்போது கூறி என்ன பயன்?" என்றார் குமாரி செல்ஜா.

ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் குமாரி செல்ஜா இடையே பிரச்னை நிலவியது ஊடகங்களில் வெளிப்படையாகப் பேசப்பட்டன. குறிப்பாக வேட்பாளர்கள் அறிவிப்பில் குமாரி செல்ஜா ஏமாற்றமடைந்ததாகத் தெரிகிறது. மொத்த வேட்பாளர்களில் 70 பேர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ஆதரவாளர்கள், 9 பேர் மட்டுமே குமாரி செல்ஜாவின் ஆதரவாளர்கள் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குமாரி செல்ஜா தேர்தல் பிரசாரத்தைத் தாமதமாகத் தொடங்கியதற்கு இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் பற்றி பேசியுள்ள குமாரி செல்ஜா வேட்பாளர்கள் தேர்வு குறித்து விமர்சனம் வைத்துள்ளார்.