கோப்புப்படம் 
இந்தியா

மணி சங்கர் ஐயர் கருத்துக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பு இல்லை: ஜெய்ராம் ரமேஷ்

கிழக்கு நியூஸ்

மணி சங்கர் ஐயர் அவருடைய அதிகாரத்துக்குள்பட்டு மட்டும்தான் பேசுவார், அவருடையக் கருத்துக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பு இல்லை என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மணி சங்கர் ஐயர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "1962 அக்டோபரில் இந்தியா மீது சீனா படையெடுத்ததாகக் கூறப்படுகிறது" என்றார். 1962 இந்தியா - சீனா போர் குறித்த மணி சங்கர் ஐயரின் இந்தக் கருத்து பூதாகரமானது. நாட்டுக்காக உயிர் கொடுத்த ஒவ்வொரு ராணுவ வீரர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக பாஜகவினர் விமர்சிக்கத் தொடங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடுகையில், "சீனப் படையெடுப்பு என்று பேசியதற்காக மணி சங்கர் ஐயர் மன்னிப்புக் கோரியுள்ளார்" என்று பதிவிட்டார். இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தற்போது விளக்கமும் அளித்துள்ளார்.

"மணி சங்கர் ஐயர் என்பவர் யார்? அவர் ஒரு முன்னாள் எம்.பி., முன்னாள் அமைச்சர். அவருக்கு உண்டான அதிகாரத்துக்குள்பட்டு மட்டும்தான் அவர் பேசுவார். அதற்கும் காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஊடகம், பாஜக, சமூக ஊடகம் என அனைவரும் இதுகுறித்து தொடர்ந்து பேசட்டும். காங்கிரஸ் கட்சியில் மணி சங்கர் ஐயருக்கு இன்று எந்தப் பொறுப்பும் கிடையாது. அவர் கட்சியில் இருக்கிறார். ஆனால், கட்சியில் ஒரு எம்.பி.யாக கூட அவர் இல்லை. வெறும் முன்னாள் எம்.பி. தான்" என்றார் ஜெய்ராம் ரமேஷ்.