இந்தியா

பாஜகவில் இணைந்த தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர்

கிழக்கு நியூஸ்

தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் தில்லி காங்கிரஸ் தலைவராக இருந்த அரவிந்தர் சிங் லவ்லி, கடந்த மாதம் 28-ல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், நிர்வாகிகள் நியமனத்துக்கு தலைமையில் இருந்து அனுமதி கிடைப்பதில்லை, ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்ததில் உடன்பாடில்லை எனப் பல்வேறு விஷயங்களை அரவிந்தர் சிங் லவ்லி குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, தில்லி காங்கிரஸ் பிரிவின் இடைக்காலத் தலைவராக தேவேந்திர யாதவ் நியமிக்கப்பட்டார். பஞ்சாப் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் தேவேந்திர யாதவுக்கு இது கூடுதல் பொறுப்பாகவே வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி முன்னிலையில் அவர் தன்னைக் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இவருடன் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ-க்கள் குமார் சௌஹான், நசீப் சிங் மற்றும் நீரஜ் பசோயா மற்றும் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அமித் மாலிக் ஆகியோரும் பாஜகவில் இணைந்தார்கள்.

பாஜகவில் இணைந்தவுடன் அவர் கூறியதாவது:

"தில்லி மக்களுக்காக பிரதமர் தலைமையின் கீழ், பாஜகவின் குடையின் கீழ் செயலாற்றுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அரிதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வரும் நாள்களில் தில்லியிலும் பாஜகவின் கொடி பறக்கும்" என்றார் அரவிந்தர் சிங் லவ்லி.

தில்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.