தேர்தல் நடத்தை விதிகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது காங்கிரஸ் கட்சி.
1961 தேர்தல் நடத்தை விதிகள் பிரிவு 93-ன் கீழ், தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது மக்களின் ஆய்வுக்குக் கிடைத்து வந்தன. இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, சமீபத்தில் இந்தப் பிரிவில் திருத்தம் மேற்கொண்டது மத்திய அரசு.
திருத்தத்திற்கு முன்பு வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், தேர்தல் முகவர்கள் நியமனம் தொடர்பான ஆவணங்கள், தேர்தல் முடிவுகள் மற்றும் வேட்பாளரின் செலவுக் கணக்குகள் ஆவணங்கள், வேட்பாளர்களின் காணொளிப் பதிவுகள், வாக்குச்சாவடி காணொளிப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்தும் பொதுமக்களின் ஆய்வுக்குக் கிடைத்து வந்தது.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி இவற்றில் சில ஆவணங்களை பொது மக்களின் பார்வையில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் நடத்தை விதிகள் பிரிவு 93-ல் திருத்தம் மேற்கொண்டது மத்திய அரசு. இதன்படி வாக்குச்சாவடி காணொளிப் பதிவுகள் உள்ளிட்ட சில மின்னணு ஆவணங்கள் இனி பொது ஆய்வுக்குக் கிடைக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த திருத்தத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பலவும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தன. இந்நிலையில், இந்தப் புதிய சட்டதிருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி ரீட் மனு தாக்கல் செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.