காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு @INCIndia
இந்தியா

நீட் தேர்வு கட்டாயம் இல்லை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

“நாடு முழுவதும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை கொண்டுவரப்படாது”.

யோகேஷ் குமார்

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், ராகுல் காந்தி உட்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.

* நாடு முழுவதும் சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சாதியினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

* பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்

* இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்.

* நாடு முழுவதும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை கொண்டுவரப்படாது.

* மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

* அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணிமுறை நீக்கப்படும்.

* 8- வது அட்டவணையில் புதிய பிராந்திய மொழிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசு பணிக்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும்.

* நீட், கியூட் தேர்வுகள் கட்டாயம் கிடையாது.

* நீட் தேர்வு நடத்தலாமா வேண்டாமா என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யலாம்.

* மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து, புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்.

* 100 நாள் வேலை திட்டத்தில் ஒருநாள் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்.

* விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும்.

* தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுடன் ஆலோசித்து திருத்தி அமைக்கப்படும்.

* 12ம் வகுப்பு வரை கட்டாய கல்வி.

* ரயிலில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை மீண்டும் கொண்டு வரப்படும்.

* 2025 முதல் மத்திய அரசு பணிகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.