காணொளி வாயிலாக மஹாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அரசியலுக்காக ஹிந்துக்களைப் பிரிக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரூ. 7600 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டிய பிறகு, பிரதமர் நரேந்திர மோடி பேசியவை பின்வருமாறு:
`நேற்று (அக்.08) ஹரியாணா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியாகின. நாட்டின் மனநிலையை ஹரியாணா கூறியுள்ளது. இரு ஆட்சிக்காலத்தை நிறைவு செய்தபிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது வரலாற்றுச் சிறப்புமிக்கது.
ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒரு சாதியினரை வேறொரு ஹிந்து மத சாதியினருடன் சண்டைபோட வைப்பதே காங்கிரஸின் கொள்கை. ஹிந்துக்களைப் பிரிப்பது தனக்குச் சாதகமான ஒன்று என்பதை காங்கிரஸ் அறியும். அரசியல்ரீதியான அனுகூலங்களைப் பெற ஹிந்து சமூகத்தைப் பரபரப்பில் வைத்திருக்கவே காங்கிரஸ் விரும்புகிறது. இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் இதைக் காங்கிரஸ் பின்பற்றுகிறது.
ஒட்டு மொத்த காங்கிரஸ் குழுமமும், நகர்புற நக்ஸல்களும் பொதுமக்களைத் திசைதிருப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் காங்கிரஸின் அனைத்துத் திட்டங்களும் முறியடிக்கப்பட்டது. தலித்துகள் மத்தியில் பொய்களைப் பரப்ப நினைக்கிறது காங்கிரஸ். தலித்துகளின் வாக்குவங்கியை உடைத்து அதன் மூலம் இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸ் விரும்பியதை தலித்துகள் புரிந்துகொண்டனர்.
இன்றைக்கு ஹரியாணாவில் உள்ள தலித்துகள் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். பாஜகவின் வளர்ச்சிப் பணிகளை பார்த்தபிறகு ஓ.பி.சி.க்கள் நம்முடன் உள்ளனர். ஹரியாணா விவசாயிகள் பாஜகவின் விவசாயிகள் நலத்திட்டங்களால் மகிழ்ச்சியில் உள்ளனர்’ என்றார்.