ANI
இந்தியா

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு

கிழக்கு நியூஸ்

18-வது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், " மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி இருப்பார் என்ற தகவலை காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி மக்களவையின் இடைக்காலத் தலைவர் பர்த்ருஹரி மஹதாபுக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பிவிட்டார்." என்றார்.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இண்டியா கூட்டணித் தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொண்டார்கள். தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) எம்.பி. சுப்ரியா சுலே, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், ராஷ்ட்ரீய லோகாந்திரிக் கட்சித் தலைவர் ஹனுமன் பெனிவால் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றார்கள். இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பிறகே, இந்த அறவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக எந்தவொரு எதிர்க்கட்சியும் 10 சதவீத இடங்களைக் கைப்பற்றவில்லை. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்க, குறைந்தபட்சம் அவையின் மொத்த பலத்தில் 10 சதவீத இடங்களை வென்றிருக்க வேண்டும். 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ராய் பரேலியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். ராய் பரேலி எம்.பி.யாக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக்கியத்துவம் வாய்ந்த மக்களவையின் பொதுக் கணக்குக் குழுத்தலைவராகப் பதவி வகிப்பார். மேலும் சிபிஐ, மத்திய தகவல் ஆணையம், மத்திய மனித உரிமைகள் ஆணையம், லோக் பால், மத்திய விஜிலென்ஸ் ஆணையம் போன்ற அமைப்புகளின் தலைவர்களைத் தேர்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது அல்ல. ஆனால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையானது.