இந்தியா

காங்கிரஸால் தில்லியில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது: ஆம் ஆத்மி

கெஜ்ரிவால் மீது பாஜக அவதூறு பரப்புவது போலத்தான் ராகுல் காந்தியும் அவதூறு பரப்புகிறார்.

ராம் அப்பண்ணசாமி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியாது என கருத்து தெரிவித்துள்ளார் ஆம் ஆத்மியின் ஹரியாணா மாநிலத் தலைவர் சுஷில் குப்தா.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை முன்னிட்டு, நேற்று (ஜன.13) சீலம்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியவை,

`விலைவாசி உயருகிறதா அல்லது குறைகிறதா என்பதைக் கேட்க விரும்புகிறேன். கெஜ்ரிவாலும், பிரதமர் மோடியும் விலைவாசி குறித்து கூறுவது என்ன? விலைவாசியைக் குறைப்பதாக அவர்கள் கூறுவார்கள். விலைவாசி குறைந்திருக்கிறதா? ஏழைகள் மேலும் ஏழையாகின்றனர்.

100 முதல் 150 கோடீஸ்வரர்கள் நாட்டை இயக்குகின்றனர். அனைத்துவித சலுகைகளும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அதானி, அம்பானி குறித்து இதுவரை பிரதமர் மோடி ஏதாவது பேசியிருக்கிறாரா? அதானி குறித்து கெஜ்ரிவால் ஏதாவது தெரிவித்திருக்கிறாரா?’ என்றார்.

இந்நிலையில், இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் ஹரியாணா மாநிலத் தலைவர் சுஷில் குப்தா வழங்கிய பேட்டியில் கூறியவை,

`கடந்த 10 வருடத்தில் தில்லியில் ஒரு தொகுதியைக் கூட ராகுல் காந்தியால் வெல்ல முடியவில்லை, இந்த முறையும் அவரால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறமுடியாது. நோக்கங்களை வெளிப்படுத்தாமல், கெஜ்ரிவால் மீது பாஜக அவதூறு மட்டுமே பரப்பிக்கொண்டிருக்கும், அதையேதான் தில்லி பேரணியின்போது ராகுல் காந்தியும் செய்தார்’ என்றார்.

வரும் பிப்ரவரி 5-ல் ஒரே கட்டமாக தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ல் எண்ணப்படும். தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிக்கான 2020 தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 62 தொகுதிகளும், பாஜகவுக்கு 8 தொகுதிகளும் கிடைத்தன.

கடந்த 2015 மற்றும் 2020 தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.