இந்தியா

பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் திட்டம்: ரவிசங்கர் பிரசாத்

இந்திய மக்களால் புறக்கணிக்கப்பட்ட பிறகு, காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சதியில் இறங்கியுள்ளன

ராம் அப்பண்ணசாமி

ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தை முன்வைத்து செபி தலைவர் மாதபி புச் மீது எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு இன்று (ஆகஸ்ட் 12) செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்த ரவிசங்கர் பிரசாத், ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தை பெரிதுபடுத்துவது மூலம் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

தில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரவிசங்கர் பிரசாத் பேசியவை பின்வருமாறு:

`இந்திய மக்களால் புறக்கணிக்கப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சதியில் இறங்கியுள்ளன. கடந்த சனிக்கிழமை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது. ஞாயிற்றுக்கிழமை இதைப் பெரிதுபடுத்துவதன் மூலம், இந்திய பங்குச்சந்தையை திங்கட்கிழமை சீர்குலைக்க திட்டமிடப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில், ஜூலை மாதத்தில் முழு விசாரணையை முடித்த செபி அதைத் தொடர்ந்து ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. நோட்டீஸுக்குத் தகுந்த விளக்கமளிக்காமல் ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது ஹிண்டன்பர்க் நிறுவனம்.

எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் பிரதமர் மோடியின் புகழுக்குக் களம் ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இதில் ஈடுபடுகின்றன. ஹிண்டன்பர்க் அறிக்கையை முன்வைத்து அவர்கள் சமூகத்தில் பொய்யைப் பரப்பி வருகிறார்கள்’.