தமிழகத்திற்கு வரவிருந்த செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை குஜராத்திற்கு மத்திய அரசு மாற்றியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒடிசா, பஞ்சாப், ஆந்திர மாநிலங்களில் ரூ. 4,600 கோடி மதிப்பீட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த ஆக. 12 அன்று ஒப்புதல் வழங்கியது.
அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்த 4 திட்டங்களுடன் சேர்த்து நாட்டில் செயல்படுத்தப்படும் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாகவும், 6 மாநிலங்களில் ரூ. 1.60 லட்சம் கோடி முதலீட்டில் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று (ஆக. 14) வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,
`நாட்டில் நான்கு செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைக்க மோடி அரசு பச்சைக்கொடி காட்டி உள்ளது.
விரிவான பின்னணி வேலைகளில் ஈடுபட்ட பிறகு, ஒரு முன்னணி தனியார் நிறுவனம் தெலுங்கானாவில் திட்டத்தை தொடங்குவதற்காக விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தது. அது ஆந்திராவிற்கு இடம்பெயர வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் அங்கீகரிக்கப்பட்டது.
வெகுகாலத்திற்கு முன்பே இதேபோல கட்டாயத்தின்பேரில் இடமாற்றம் நடைபெற்றது. இரு செமிகண்டக்டர் ஆலை திட்டங்களை, அவை முன்மொழியப்பட்ட இடமான தெலுங்கானாவில் இருந்து குஜராத்திற்கு மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதேபோல், தமிழ்நாட்டிற்காக திட்டமிடப்பட்ட மற்றொரு உற்பத்தி ஆலை குஜராத்திற்கு மாற்றப்படவேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் ஒப்புதல் பெறப்பட்டது.
இன்னும் ஏதாவது சொல்ல வேண்டுமா? இந்தியாவை வலிமையாக்கும் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியைப் பற்றி பிரதமர் பேசுகிறார். ஆனால் நடுவர் மிகவும் வெளிப்படையாக ஒருதலைப்பட்சமாக இருந்தால், போட்டி கேலிக்கூத்தாக மாறிவிடும்’ என்றார்.