திருச்சூர் பூரம் திருவிழா நடைபெறும் இடத்துக்குச் செல்வதற்கு ஆம்புலன்ஸைப் பயன்படுத்தியதாக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப் பதிவு செய்துள்ளது கேரள காவல்துறை.
ஒவ்வொரு வருடமும் மலையாள மாதம் மேடத்தின்போது (ஏப்ரல் மாதம்) கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், பூரம் திருவிழா கொண்டாடப்படும். வான வேடிக்கை நிகழ்வு, அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுப்பு என இந்த திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தத் திருவிழாவை நேரில் காண்பதற்குக் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பொதுமக்கள் திருச்சூரில் கூடுவார்கள்.
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த தற்போதைய மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி, நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற திருச்சூர் பூரம் விழாவில் கலந்துகொண்ட முறை சர்ச்சையாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடும் திருச்சூர் பூரம் விழாவில் கூட்ட நெரிசல் மிகுதியாக இருக்கும் என்பதால், விழா நடைபெறும் பகுதிக்குள் தனியார் வாகனங்களில் செல்லத் தடை உள்ளது. கூட்ட நெரிசலைக் கடந்து விழா நடக்கும் பகுதிக்கு அருகில் செல்ல சுரேஷ் கோபி ஆம்புலன்ஸை உபயோகித்ததாகக் கூறப்படுகிறது.
மருத்துவ அவரச காலத்துக்குப் பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸில், பூரம் நிகழ்வுக்கு சுரேஷ் கோபி வந்ததாகக் கூறி சிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் கே.பி. சுமேஷ் அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மோட்டார் வாகன சட்டம் 179, 192, 288 ஆகிய பிரிவுகள் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 279 ஆகியவற்றின் கீழ் சுரேஷ் கோபியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சுரேஷ் கோபி, `சம்பவ இடத்துக்கு நான் ஆம்புலன்ஸில் வரவில்லை. மாவட்ட பாஜக தலைவரின் காரில் வந்தேன். நான் ஆம்புலன்ஸில் வந்ததாக யாராவது தெரிவித்தால் அது நிஜமா அல்லது மாயையா என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும். இந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய சிபிஐ விசாரணை மேற்கொள்ளலாம்’ என்றார்.
இதைத் தொடர்ந்து சுரேஷ் கோபி ஆம்புலன்ஸ் ஒன்றில் இருந்து இறங்கி, பூரம் திருவிழா நடக்கும் இடத்துக்குச் செல்லும் காணொளி வெளியானது. இதனை அடுத்து, காலில் அடிபட்டதால் ஆம்புலன்ஸில் பயணிக்கும் நிலை ஏற்பட்டதாக பின்னர் விளக்கமளித்தார் சுரேஷ் கோபி.