படம்: https://twitter.com/parakala
படம்: https://twitter.com/parakala
இந்தியா

தேர்தல் நிதி பத்திரங்கள் உலகிலேயே மிகப் பெரிய ஊழல்: நிர்மலா சீதாராமன் கணவர்

கிழக்கு நியூஸ்

தேர்தல் நிதி பத்திரங்கள் உலகளவில் மிகப் பெரிய ஊழல் எனப் பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சரின் கணவருமான பர்கலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுக்கொள்ளும் நடைமுறை சட்டவிரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தது. மேலும், தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை தொடர்புடைய அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் இந்தத் தகவல்களை உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் ஏப்ரல் 12,2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரையிலான அனைத்துத் தகவல்களையும் தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்தது.

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜக ரூ. 6,986.5 கோடியும், திரிணமூல் காங்கிரஸ் ரூ. 1,397 கோடியும், காங்கிரஸ் ரூ. 1,334 கோடியும், பாரத ராஷ்டிர சமிதி ரூ. 1,322 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளன.

தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்து ரிப்போர்டர் சேனலிடம் பரகலா பிரபாகர் பேசிய காணொளியை கேரள காங்கிரஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பரகலா பிரபாகர் கூறியதாவது:

"தேர்தல் நிதி பத்திர விவகாரங்கள் மிகப் பெரிய விவகாரமாக மாறியுள்ளது. தேர்தல் நிதி பத்திரம் காரணமாக, தேர்தல் போட்டியானது பாஜக மற்றும் மக்களுக்கு இடையிலானதாக மாறியுள்ளது. இரு கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான தேர்தல் போட்டி அல்ல.

தேர்தல் நிதி பத்திர விவகாரங்கள் கூடுதல் கவனத்தைப் பெறும். இது ஏற்கெனவே பாஜகவின் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. இது மிகவும் வேகமாக பொதுமக்களைச் சென்றடைகிறது. உலகிலேயே மிகப் பெரிய ஊழல் என்பதை அனைவரும் மெதுவாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். தேர்தல் பத்திர விவகாரம் காரணமாக, இந்த அரசு வாக்காளர்களிடமிருந்து கடுமையான தண்டனையைப் பெறப்போகிறது" என்றார் அவர்.