இந்தியா

கர்நாடகம் வந்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு குமாரசாமி வலியுறுத்தல்

"எந்தத் தவறும் செய்யவில்லையெனில், எதற்காக அஞ்ச வேண்டும். எதற்காக ஓடி ஒழிய வேண்டும்."

கிழக்கு நியூஸ்

ஆபாசக் காணொளி வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு முன் பிரஜ்வல் ரேவண்ணா ஆஜராக வேண்டும் என ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் (ஜேடிஎஸ்) தலைவர் தேவெகௌடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாசக் காணொளி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த விசாரணைக் குழு முன் பிரஜ்வல் ரேவண்ணா இன்னும் ஆஜராகவில்லை.

எந்தத் தவறும் செய்யவில்லையென்றால் எதற்காக அச்சப்பட வேண்டும் என ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி இன்று விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகம் திரும்ப வேண்டும். விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். எந்தத் தவறும் செய்யவில்லையெனில், எதற்காக அஞ்ச வேண்டும். எதற்காக ஓடி ஒழிய வேண்டும். இந்தச் சூழலை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

இதுபோன்று 400 சம்பவங்கள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டும் ராகுல் காந்தியிடம் இதுகுறித்து எந்த ஆவணமும் இல்லையா? கர்நாடகத்தில் அவர்களுடைய ஆட்சிதான் நடக்கிறது. 2000, 3000 சம்பவங்கள் நடந்துள்ளதாக பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் குற்றம்சாட்டுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வலிமையை அழிக்க நினைக்கிறார்கள். இந்த விவகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" என்றார் குமாரசாமி.