ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட அறிக்கையை கொலம்பியா திரும்பப் பெற்றதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து விளக்குவதற்காக 7 அனைத்துக் கட்சிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்குச் சென்றது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்தியாவுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் வெளியிட்ட அறிக்கையை கொலம்பியா திரும்பப் பெறுவதாக சசி தரூர் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தது கொலம்பியா.
"நாங்கள் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்தோம். மூத்த துணை அமைச்சர் எங்களை வரவேற்றார். சில நல்ல செய்திகள் உள்ளன. இந்தியாவுக்கு ஏமாற்றமளிக்கக்கூடிய நிலைப்பாட்டில் முன்பு வெளியிடப்பட்ட அறிக்கையை அவர்கள் திரும்பப் பெறுகிறார்கள். நம் நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு, நமது நிலைப்பாட்டுக்கு ஆதரவான அறிக்கையை அவர்கள் வெளியிடுவார்கள்" என்றார் சசி தரூர்.
அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதரும் பாஜக தலைவருமான தரன்ஜித் சிங் சாந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "பொறுப்பு வெளியுறவு அமைச்சருடன் நாங்கள் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டோம். நம் தலைவரும் ஒட்டுமொத்த குழுவும் நிகழ்வுகள் நடந்ததை காலவாரியாக எடுத்துரைத்து குறிப்பிட்ட அம்சங்களை விளக்கினார்கள். அவர்கள் சிலவற்றைத் தவறவிட்டிருக்கலாம். விளக்கியதன் விளைவு சில அறிக்கைகளை அவர்கள் திரும்பப் பெறுகிறார்கள். மற்ற காரணங்களுக்கு அப்பாற்பட்டு, பாதுகாப்பு கவுன்சிலில் விரைவில் உறுப்பினராகவுள்ளது கொலம்பியாவின் முக்கியத்துவம்" என்றார் சாந்து.
இந்தக் குழுவில் பாஜகவைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யா, புவனேஸ்வர் கலிடா, மிலிந்த் தியோரா, சாம்பவி, ஹரிஷ் பாலயோதி, தரன்ஜித் சிங் சாந்து உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்கள். கொலம்பியா செல்லும் முன் இந்தக் குழுவினர் கயானா மற்றும் பனாமாவுக்குச் சென்றிருந்தார்கள். கொலம்பியாவைத் தொடர்ந்து, பிரேசில் செல்கிறது இந்தக் குழு. இறுதியாக அமெரிக்காவுடன் இப்பயணத்தை நிறைவு செய்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தார்கள். இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக மே 7 அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. மே 8, 9 மற்றும் 10 ஆகிய நாள்களில் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த இந்தியாவும் பாகிஸ்தான் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. போர் பதற்றம் அதிகரித்த நிலையில் மே 10 அன்று சண்டையை நிறுத்துவதாக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.