மஹாராஷ்டிரா சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் இறுதி நாளான இன்று (அக்.29), மனுத்தாக்கல் நேரம் நிறைவடைய இன்னும் சில மணிநேரங்கள் உள்ள நிலையிலும், ஆளும் மஹாயுதி கூட்டணியிலும், எதிர்கட்சிகளைக் கொண்ட மஹாவிகாஸ் அகாதி கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடையவில்லை.
இன்று பிற்பகல் நிலவரப்படி மஹாராஷ்டிரா சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் மஹாவிகாஸ் அகாதி கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 102 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 84 தொகுதிகளிலும், ஷரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 82 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. இதை ஒட்டி மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 268 தொகுதிகளுக்கும் இக்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
ஆனால் மீதமுள்ள 20 தொகுதிகளில் வாக்குப்பதிவின் கடைசி நாளான இன்று (அக்.29) பிற்பகல் வரையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. குறிப்பாக மும்பை மாநகரத்தில் உள்ள வெர்சோவா, பைகுலா, வடாலா போன்ற தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸும், உத்தவ தாக்கரேவின் சிவசேனாவும் விரும்புவதால் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
அதே நேரம் ஆளும்தரப்பான மஹாயுதி கூட்டணியில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 281 தொகுதிகளுக்கான உடன்படிக்கை இன்று பிற்பகல் வரை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 7 தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் வரை 146 தொகுதிகளில் பாஜகவும், 78 தொகுதிகளில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும், 51 தொகுதிகளில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
ஒரே கட்டமாக வரும் நவம்பர் 20-ல் மஹாராஷ்டிரா சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவம்பர் 23-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.