மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தில்லியில் நேற்று (டிச.26) காலமானார். இதைத் தொடர்ந்து அஞ்சலிக்காக அவரது உடல் தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டார் முதல்வர் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (டிச.26) காலை சென்னையில் இருந்து தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். தில்லியில் அவர் வழங்கிய பேட்டி பின்வருமாறு,
`இந்தியாவின் பிரதமராக இருந்து பொருளாதாரத்தை எந்த அளவுக்கு (அவர்) முன்னேற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும். டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு காங்கிரஸுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும் பேரிழப்பு. குறிப்பாக தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்குப் பல்வேறு திட்டங்களை உருவாக்கத் துணை நின்றார்.
தமிழகத்திற்கான நெடுஞ்சாலைத் திட்டங்கள், புரட்சிகரமான நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவற்றை அவர் செயல்படுத்தினார். அனைத்திற்கும் மேலாக, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி தமிழர்களின் கனவை நிறைவேற்றித் தந்தார் மன்மோகன் சிங். தலைவர் கலைஞருடன் நெருங்கிப் பழகி, நட்புணர்வுடன் அவர் இருந்தார்.
அவரது மறைவு வேதனைக்குரிய ஒன்று. அவரை இழந்து வாடிக்கொண்டிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம், கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டம் போன்ற பல திட்டங்களை தமிழகத்திற்காக செயல்படுத்தினார் மன்மோகன் சிங்’ என்றார்.
இதனை அடுத்து மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.