கேரள மாநிலத்தில் நடைபெற்ற, `வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில்’ பங்கேற்று புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் திறந்துவைத்தனர்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை ஒட்டி கடந்த 2023-ல் தொடங்கி தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கடந்த டிச.28-ல் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழாவில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார்.
இந்நிலையில், கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் இன்று (டிச.12) நடைபெற்ற `வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில்’ பங்கேற்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
வைக்கம் போராட்டத்தை நினைவுகூறும் விதமாக, கடந்த 1994-ல் வைக்கத்தில் தந்தை பெரியாருக்கு சிலை அமைக்கப்பட்டு நினைவகம் திறக்கப்பட்டது. அந்த நினைவகம் பழமையடைந்ததால், சமீபத்தில் ரூ. 8.14 கோடியில் நினைவகம் சீரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது.
இதில் பெரியார் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறும் வகையில் நிரந்தர கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர்கள் மாடம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் திறந்துவைத்துப் பார்வையிட்டனர்.
இதை தொடர்ந்து விழாவில் சிறப்புரை ஆற்றினார் முதல்வர் ஸ்டாலின். அதன்பிறகு விழா மேடையில் வைத்து, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு 2024-ம் ஆண்டுக்கான வைக்கம் விருதை வழங்கிச் சிறப்பித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, மு.பெ. சாமிநாதன், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
- மேலும் -