தில்லியில் செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்பு சோதனை ANI
இந்தியா

தில்லி காற்று மாசு: செயற்கை மழை உருவாக்கும் சோதனைகள் தற்காலிக நிறுத்தம் | Cloud Seeding |

மேக விதைப்புக்குப் பிறகும் தில்லியில் மழை பெய்யாத நிலையில் சோதனை வெற்றி அடைந்ததாக அமைச்சர் பேச்சு...

கிழக்கு நியூஸ்

தில்லியில் காற்று மாசைக் குறைக்க மேக விதைப்பு சோதனை செய்யப்பட்டும் மழை பெய்யாத நிலையில், செயற்கை மழை உருவாக்கும் சோதனைகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ளது.

தில்லியில் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலத்தில் காற்றின் அடர்த்தி அதிகரித்து, மாசின் அளவும் கூடுவதால் மக்கள் சுவாசிப்பதற்கே சிரமப்படும் நிலை உருவாகிறது. இதனால் குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

காற்றின் ஈரப்பதம், அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது, குளிர் காலத்தில் காற்றோட்டம் குறைவு, வாகனம் மற்றும் தொழிற்சாலை புகையால் ஏற்படும் மாசு உள்ளிட்ட காரணங்களால் தில்லியின் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளது. இதைக் கண்காணிக்கும் வகையில் தில்லி முழுவதும் 38 கண்காணிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதனால் காற்றின் மாசு மிக மோசமான நிலைக்குச் சென்றது.

இதையடுத்து காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகச் செயற்கை மழையை உருவாக்கும் முயற்சியில் தில்லியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த மே 7 அன்று ரூ. 3.21 கோடியில் 5 செயற்கை மழை சோதனைகள் மேற்கொள்வதற்கான திட்டம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டது. அதன்படி கடந்த வாரம் புராரி பகுதியில் முதற்கட்ட செயற்கை மழை சோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று (அக்.28) ஐஐடி கான்பூர் ஆய்வாளர்களுடன் இணைந்து மயூர் விஹார், நொய்டா உட்பட தில்லியின் முக்கிய பகுதிகளில் சிறிய விமானம் மூலம் மேக விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேகங்களில் சில்வர் ஐயோடைட், சோடியம் குளோரைட் உள்ளிட்ட தனிமங்களைச் செயற்கையாக விமானங்கள் மூலம் தூவி மழையை உருவாக்கும் முறைக்கு மேக விதைப்பு என்று பெயர். தில்லியில் நேற்று செயற்கை மழையை உருவாக்க 16 குப்பிகளில் இருந்து தனிமங்கள் சிறிய விமானம் மூலம் மேகங்களின் மீது மழை விதைகளைத் தூவின. இதனால் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை தில்லியில் மழை பெய்யவில்லை.

இதையடுத்து தில்லியின் மேக விதைப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐஐடி கான்பூர் அறிவித்துள்ளது. காற்றில் செயற்கை மழைக்கான சோதனைகளை நடத்த போதுமான ஈரப்பதம் இல்லாததால் சோதனை நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மேக விதைப்பு குறித்து தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஜீந்தர் சிங் சிர்சா கூறியதாவது:-

”தில்லியில் நடத்தப்பட்ட சோதனை 100% வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடந்த சோதனையில் 10-15% ஈரப்பதம் உள்ள நிலையில் மேக விதைப்பு மூலம் செயற்கை மழை கொண்டு வர முடியுமா என்பது கணக்கிடப்பட்டது. ஆனால் மேக விதைப்புக்குப் பிறகும் தில்லியில் வறண்ட வானிலை காணப்படுகிறது. இதற்குக் காற்றின் ஈரப்பதம் குறைவாக உள்ளதே காரணம். இதனால் செயற்கை மழை சோதனை இதுவரை எந்தப் பலனையும் தரவில்லை. இதற்கடுத்த சோதனை 15% மேல் ஈரப்பதம் உள்ள பகுதிகளில் நடத்தப்படும்” என்றார்.

The cloud-seeding activity in Delhi has been put on hold due to insufficient moisture in the clouds says IIT Kanpur