இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கானத் தடையை அக்டோபர் 24 வரை நீட்டித்து இந்தியா உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 30 முதல் இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கானத் தடை விதித்து இந்தியா உத்தரவிட்டது.
தொடக்கத்தில் தடையானது மே 24 வரை விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன் 24, ஜூலை 24, ஆகஸ்ட் 24, செப்டம்பர் 24 வரை அடுத்தடுத்து தடைகள் நீட்டிக்கப்பட்டன. தற்போது இந்தத் தடையானது அக்டோபர் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமானங்கள் மற்றும் ராணுவ விமானங்கள் உள்பட அனைத்து விமானங்களுக்கும் இந்திய வான்பரப்பில் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையும் அக்டோபர் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விமானப் பணியாளர்களுக்கான அமைப்புக்கு (NOTAMs) இந்தியா மற்றும் பாகிஸ்தான் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளன.
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் ஏறத்தாழ 800 வாராந்திர விமான சேவைகள் பாதிக்கப்படுகின்றன. வடஇந்தியாவிலிருந்து ஐரோப்பா, பிரிட்டன், மேற்காசிய நாடுகள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல கூடுதல் தூரத்தைக் கடந்து விமானங்கள் பயணிக்க வேண்டியுள்ளது. கூடுதல் எரிபொருள் செலவாவது, விமானங்களை இயக்குவதற்கானத் திட்டமிடல் என பல்வேறு சிரமங்களை இந்திய விமான நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன.
Pakistan Flights | Indian Airspace | Pakistan Airspace |