இந்தியா

தெருநாய்கள் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவு: பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி உறுதி | Supreme Court | Stray Dogs

உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை இன்னும் விசாரணைக்குப் பட்டியலிடவில்லை.

ராம் அப்பண்ணசாமி

தில்லி-என்.சி.ஆர். பகுதியில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்றவேண்டும் என்று இரு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அண்மையில் உத்தரவு பிறப்பித்த நிலையில், அது தொடர்பான உத்தரவை பரிசீலனை செய்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இன்று (ஆக. 13) தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் விலங்குகள் நலக் குழுக்கள் கவலை எழுப்பியதைத் தொடர்ந்து, இந்த உறுதியை தலைமை நீதிபதி வழங்கியுள்ளார்.

தேசிய தலைநகர் பகுதியில் இருக்கும் அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து காப்பகங்களுக்கு மாற்றும்படி கடந்த ஆக. 11 அன்று உச்ச நீதிமன்றம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. இந்த பகுதியில் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இத்தகைய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தக்கோரும் மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று (ஆக. 13) நடைபெற்றது.

அப்போது, தெருநாய்கள் குறித்து உச்ச நீதிமன்றம் முன்பு ஒரு முறை பிறப்பித்த உத்தரவு அவருக்கு நினைவுபடுத்தப்பட்டது.

தெருநாய்களை இடமாற்றம் செய்வதையும், கொல்வதையும் அந்த உத்தரவு தடைசெய்ததுடன், விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ஏபிசி) விதிகள் மற்றும் அது தொடர்புடைய பிற சட்டங்களை அதிகாரிகள் பின்பற்றவேண்டும் என்று குறிப்பிட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தைப் பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி மனுதாரர் தரப்பிடம் கூறினார். அதேநேரம் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை இன்னும் விசாரணைக்குப் பட்டியலிடவில்லை.

கடந்த ஆக. 11 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தில்லி மாநகராட்சி (MCD) மற்றும் புது தில்லி மாநகர மன்றம் (NDMC) ஆகியவை காப்பகங்களை உருவாக்கி, பொது இடங்களில் இருந்து தெருநாய்களை உடனடியாக அகற்றத் தொடங்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. முதலில் அதிக ஆபத்துள்ள மண்டலங்களில் கவனம் செலுத்தும்படி நீதிமன்றம் கூறியது.

தில்லியை ஒட்டி அமைந்துள்ள உத்தர பிரதேசத்தின் நொய்டா மற்றும் ஹரியாணாவின் குருகிராமில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.