ANI
இந்தியா

நாட்டில் அரசியலமைப்புச் சட்டமே உயர்வானது: தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

மரபுகள் என்பவை புதிதல்ல, அது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அமைப்பு மற்றொரு அமைப்புக்கு அளிக்கும் மரியாதையைப் பற்றிய கேள்வி.

ராம் அப்பண்ணசாமி

நீதித்துறையின் அதிகார எல்லை மீறல் குறித்த விவாதத்திற்கு மத்தியில், தனது சொந்த மாநிலமான மஹாராஷ்டிரத்திற்கு பயணம் மேற்கொண்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நாட்டில் அரசியலமைப்புச் சட்டமே உயர்வானது என்று பேசியுள்ளார்.

வழக்கமாகப் பின்பற்றப்படும் மரபுகள் தன் வருகையின்போது பின்பற்றப்படாததை சுட்டிக்காட்டி, அதை உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 உடன் ஒப்பிட்டுத் தலைமை நீதிபதி பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நாட்டின் 52-வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14-ல் பி.ஆர். கவாய் பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து முதல்முறையாக தனது சொந்த மாநிலமான மஹாராஷ்டிரத்திற்கு நேற்று (மே 18) பயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்ற மாநிலத்தின் தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஆகியோர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

மஹாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு நிகழ்ச்சியில் கவாய் பேசியதாவது,

`ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நீதித்துறை, நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகியவை சமமானவை. அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த ஒவ்வொரு அமைப்பும், மற்ற அமைப்புகளுக்கு மரியாதை அளிக்கவேண்டும்.

மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாகி முதல்முறையாக மாநிலத்திற்கு வருகை தரும்போது, தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர், மும்பை காவல்துறை ஆணையர் ஆகியோர் அங்கே இருப்பது பொருத்தமானது இல்லை என்று நினைத்தால், அதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவேண்டும்.

மரபுகள் என்பவை புதிதல்ல, அது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அமைப்பு மற்றொரு அமைப்புக்கு அளிக்கும் மரியாதையைப் பற்றிய கேள்வி. அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைந்த ஓர் அமைப்பின் தலைவர் முதல் முறையாக மாநிலத்திற்கு வருகை தரும்போது, ​​அவர் நடத்தப்படும் விதத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இதுவே எங்களில் யாரேனும் ஒருவர் சம்மந்தப்பட்டிருந்தால், பிரிவு 142 பற்றிய விவாதங்கள் எழுந்திருக்கும். இவை சிறிய விஷயங்களாகத் தோன்றலாம், ஆனால் பொதுமக்களுக்கு இவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்’ என்றார்.

மேலும், `நீதித்துறை, நிர்வாகம் அல்லது நாடாளுமன்றம் ஆகியவற்றில் எது உயர்ந்தது என்ற கேட்டால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே உயர்ந்தது என்று கூறுவேன். நாட்டின் மூன்று தூண்களான நீதித்துறை, நாடாளுமன்றம், நிர்வாகம் ஆகியவை அரசியலமைப்பிற்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றுதான் நான் கூற முடியும்’ என்றார்.

இந்த விழாவைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள சைத்திய பூமிக்கு தலைமை நீதிபதி சென்றபோது, மஹாராஷ்டிரத்தின் தலைமை செயலாளர் சுஜாதா சௌனிக், காவல்துறை இயக்குநர் ராஷ்மி சுக்லா மற்றும் மும்பை காவல் ஆணையர் டெவென் பார்தி ஆகியோர் உடனிருந்தனர்.