`குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் அனுப்பும் பரிந்துரை குறித்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்கும் நிலையில், மாநில அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கும் ஆளுநரின் நடவடிக்கை குறித்து எதனால் நீதிமன்றங்கள் விசாரணை மேற்கொள்ள முடியாது’ என்று மத்திய அரசு மற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கு இந்திய தலைமை நீதிபதி கவாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை மையமாக வைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 143-ன் கீழ், உச்ச நீதிமன்றத்திற்கு 14 கேள்விகளை எழுப்பி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதினார்.
இந்த கேள்விகளை முன்வைத்து விரிவான விசாரணை நடத்திட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா மற்றும் ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது.
இதில் மத்திய அரசும், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டன.
குடியரசுத் தலைவரின் கேள்விகள் குறித்து உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணை நடத்தி வரும் நிலையில், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தரப்பில் எழுத்துப்பூர்வமாகவும், நேரடியாகவும் வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நேற்று (ஆக. 26) நடைபெற்ற விசாரணையின்போது மஹாராஷ்டிர மாநில அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல் பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி கவாய், `அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவின் கீழ் ஓர் ஆளுநர் பயன்படுத்தும் விருப்புரிமையை நீதித்துறையால் மதிப்பாய்வு செய்ய முடியும் என்றால், பிரிவு 200-ன் கீழ் உள்ள விருப்புரிமையை எதனால் மதிப்பாய்வு செய்ய முடியாது?’ என்று கேள்வி எழுப்பினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவு, ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வழிவகுக்கிறது. மாநில அரசின் தோல்வி குறித்து ஆளுநர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் முடிவு எடுக்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனத்தை நீதிமன்றங்களால் மறுபரிசீலனை செய்ய முடியும் என்று எஸ்.ஆர். பொம்மை வழக்கில் (1994) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை மையமாக வைத்து தலைமை நீதிபதி கவாய் கேள்வி எழுப்பினார்.
குடியரசுத் தலைவரின் கேள்விகளை ஆதரித்து, மத்திய அரசும், மஹாராஷ்டிரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா மற்றும் ஹரியாணா மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிவெடுக்க கட்டாயப்படுத்த முடியாது என்று வாதிட்டு வருகின்றன.