ANI
ANI
இந்தியா

அயோத்தி கோயில் திறப்பு விழாவுக்குத் தயாராகும் பிரபலங்கள்: ரஜினி செல்வாரா?

ஜெ. ராம்கி

வரும் திங்கட்கிழமை அயோத்தியில் நடைபெறவிருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் ஏராளமான திரைப்படப் பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருக்கும் திரைப்பட, கிரிக்கெட் பிரபலங்களுக்கு லக்னோவில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உ.பி. மாநில அரசின் விருந்தினர் பட்டியலில் ஏராளமான இந்தியத் திரைப்படப் பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் திரள இருக்கிறார்கள். அனைவரையும் தனியார் விமானம் மூலமாக அயோத்திக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளை உ.பி அரசு மேற்கொண்டு வருகிறது.

பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர் மற்றும் அம்ஜத் அலி கான் உள்ளிட்டோர் அயோத்திக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. ஆலியா பட், கங்கனா ரனாவத், மாதுரி தீட்சித், பாஜக எம்.பி. ஹேமமாலினி, அனுபம் கேர் மற்றும் சன்னி தியோல் ஆகியோரும் வரவிருக்கிறார்கள். இயக்குநர்கள் மதுர் பண்டார்கர், சஞ்சய் லீலா பன்சாலி, பாடகர்கள் ஸ்ரேயா கோஷல், கைலாஷ் கெர், ஷங்கர் மகாதேவன், அனுப் ஜலோட்டா, சோனு நிகம் மற்றும் அனுராதா பௌட்வால் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

ராமானந்த் சாகரின் பிரபல டிவி தொடரான ராமாயணத்தில் ராமர், சீதையாக நடித்த அருண் கோவில் மற்றும் தீபிகா சிக்லியா ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர். இயக்குநர் சந்திரபிரகாஷ் திவேதி, பாடகி மாலினி அவஸ்தி, சரோத் மேஸ்ட்ரோ அம்ஜத் அலி, இசைஞானி இளையராஜா மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா, பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகிலிருந்து ராமர் கோயில் திறப்பு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு உ.பி. மாநிலத்திற்குச் சென்ற ரஜினிகாந்த், அம்மாநில முதல்வரைச் சந்தித்தார். பின்னர் அயோத்திக்குச் சென்று தரிசனம் செய்தார்.