அஹமதாபாத் விமான விபத்து நடைபெறுவதற்கு ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு முன்பு, விமானப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வைக்கு பொறுப்பான மத்திய அரசு அமைப்புகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த மார்ச் 2025-ல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், இந்தியாவில் இருந்து புறப்படும் அல்லது தரையிறங்கும் ஒவ்வொரு விமானத்தின் பாதுகாப்பிற்கும் பொறுப்பான அரசு அமைப்பான, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) 53 சதவீதத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் பரவலாக இருந்தாலும், முக்கிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்போதுதான் அரசு அமைப்புகளின் செயல்பாடுகள் சீர்குலையத் தொடங்குவதாகத் தெரிகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த விமான ஒழுங்குமுறை அமைப்புகள், அதாவது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (BCAS) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆகியவற்றில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறை குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை வாயிலாக கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை குறித்த 375-வது அறிக்கையில் (2025–26), ஊழியர்கள் பற்றாக்குறை தொடர்பான தரவுகள் இடம்பெற்றுள்ளன.
விமானப் பாதுகாப்பை மேற்பார்வையிடும் டிஜிசிஏவில் 53%க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. விமான நிலையப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிசிஏஎஸ் அமைப்பில் 35% காலிப்பணியிடங்களும், விமான நிலைய உள்கட்டமைப்பை நிர்வகிக்கும் ஏஏஐ அமைப்பில் 17% காலிப் பணியிடங்களும் இருக்கின்றன.
`விமானப் போக்குவரத்து அளவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த அமைப்புகளில் நீண்ட காலமாக நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையால், பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் அது சார்ந்த சேவை வழங்கல் கடுமையான பாதிப்பை சந்திக்கும்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.