ANI
இந்தியா

இழப்புகள் அல்ல, விளைவுகள்தான் முக்கியம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து முப்படைகளின் தலைவர்

இறுதி முடிவுகளும், நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதுமே முக்கியம். இழப்புகளைப் பற்றிப் பேசுவது சரியாக இருக்காது.

ராம் அப்பண்ணசாமி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து முப்படைகளின் தலைவரான தளபதி அனில் சௌஹான் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், `இழப்புகள் முக்கியமல்ல; ஆனால் நடவடிக்கையின் விளைவுதான் முக்கியம்’ என இன்று (ஜூன் 3) அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் புனே பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய தளபதி சௌஹான், பாதுகாப்புப் படைகள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ளவேண்டும் என்றும், பின்னடைவுகளை எதிர்கொள்ளும்போது செயலற்ற நிலையில் இருக்க முடியாது என்றும் கூறினார்.

`நமது தரப்பில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து என்னிடம் கேட்டபோது, ​​அவை முக்கியமில்லை என்று கூறினேன். இறுதி முடிவுகளும், நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதுமே முக்கியம். இழப்புகளைப் பற்றிப் பேசுவது சரியாக இருக்காது. நீங்கள் ஒரு கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடி, இன்னிங்ஸ் தோல்வியின் அடிப்படையில் வெற்றி பெற்றால், எத்தனை விக்கெட்டுகள், எத்தனை பந்துகள், எத்தனை வீரர்கள் என்ற கேள்விக்கே இடமில்லை’ என்று அவர் பேசினார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த ப்ளூம்பெர்க்கிற்கு முன்னதாக அளித்த பேட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஆரம்ப கட்டத்தில், இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் பாதுகாப்புப் படைகள் விரைவாக தங்கள் தவறுகளை சரிசெய்துகொண்டு மீண்டும் தாக்கின என்றும் தகவலளித்தார்

அதேநேரம், நான்கு ரஃபேல் விமானங்கள் உள்பட ஆறு இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியது `முற்றிலும் தவறானது’ என்றுகூறி அந்த கருத்தை அவர் நிராகரித்தார். எனினும், அவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் அப்போது கடும் கண்டனத்தைத் தெரிவித்தன.