நீதித்துறைக்கும், அரசு நிர்வாகத்திற்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், `நாடாளுமன்றம் அல்ல, அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது’ என்ற கருத்தை இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வலியுறுத்தியுள்ளார்.
மஹாராஷ்டிரத்தில் உள்ள தனது சொந்த ஊரான அமராவதியில் வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் பேசிய கவாய், ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளும் – அரசு நிர்வாகம், நாடாளுமன்றம்/சட்டமன்றம் மற்றும் நீதித்துறை, அரசியலமைப்பின் கீழ் செயல்படுவதாக குறிப்பிட்டார்.
`நாடாளுமன்றமே உயர்ந்தது என்று பலர் கூறினாலும், நம்பினாலும், என்னைப் பொறுத்தவரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது. ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளும் அரசியலமைப்பின் கீழ் செயல்படுகின்றன’ என்று பேசிய கூறிய கவாய், `அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு மட்டுமே நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது, அதன் அடிப்படை கட்டமைப்பை மாற்றிவிட முடியாது’ என்றார்.
மேலும், `அரசாங்கத்திற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பிப்பது மட்டுமே சுதந்திரம் அல்ல. நாங்கள் குடிமக்களின் உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகள் மற்றும் கொள்கைகளின் பாதுகாவலர்கள். அதிகாரம் மட்டுமல்ல, ஒரு கடமையும் நம் மீது சுமத்தப்பட்டுள்ளது.
நாம் சுதந்திரமாக சிந்திக்கவேண்டும். மக்கள் என்ன சொல்வார்கள் என்பதை வைத்து நாம் முடிவெடுக்கக்கூடாது’ என்றார்.
1973-ம் ஆண்டு, கேசவானந்த பாரதி எதிர் கேரள அரசு வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலிருந்து `அடிப்படை கட்டமைப்பு’ கோட்பாடு உருவானது. அரசியலமைப்பின் `அடிப்படை கட்டமைப்பை’, நாடாளுமன்றத்தால் திருத்த முடியாது என்று 13 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.